பதான் படம் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு!!
“இந்தியாவில் முட்டாள்கள் பற்றிய தமது மதிப்பீடு 90 சதவிகிதத்திலிருந்து 95 சதவிகிதமாக அதிகரித்துள்ளது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘‘திரைப்படங்கள் கலையின் வடிவம். கலையைப் பற்றிய இரண்டு கோட்பாடுகள் உண்டு. ஒன்று கலைக்காக கலை. இரண்டாவது சமூக நோக்கத்துக்காக கலை. இந்த இரண்டு வடிவங்களும் பொழுதுபோக்கையே வழங்குகின்றன. கலைகள் என்பது பொழுதுபோக்கை வழங்குவதோடு, சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மக்களை ஊக்குவிக்கவும் வேண்டும். இந்த இரண்டில் இரண்டாவது கலை வடிவம்தான் நாட்டுக்குத் தேவை.
உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியாவின் நிலை 101ல் இருந்து 107க்கு சரிந்துள்ளது. வேலையின்மை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மக்களுக்கு சரியான சுகாதாரம், நல்ல கல்வி இல்லை. அதேநேரம் மக்களுக்குப் பொழுதுபோக்கும் தேவை என்று சிலர் கூறுகிறார்கள். அது உண்மைதான். ஆனால், அந்த பொழுதுபோக்கை சமூக நோக்கத்துடன் இணைக்கலாம்.
அதற்கு ராஜ்கபூரின் ஆவாரா, ஸ்ரீ 420, பூட் பாலிஷ், ஜாக்தே ரஹோ, அனாதி அல்லது சத்யஜித்ரேவின், சார்லி சாப்ளின், செர்ஜி ஐசென்ஸ்டீன் போன்ற படங்களை உதாரணமாகச் சொல்லலாம். வலதுசாரிகள் விமர்சிப்பது போல் இந்தப் படத்தை நான் விமர்சிக்கவில்லை. நான் காவிக் கும்பலைப் போல, பதானுக்கு எதிரானவனும் அல்ல. நான் ஷாருக்கான் அல்லது தீபிகா படுகோனை எதிர்க்கவுமில்லை. இந்தப் படத்தில் சமூக நோக்கம் இல்லை என்பதாலேயே எதிர்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.