கார்த்தியின் உழவன் ஃபவுண்டேசன் உடைய உழவன் விருது!
விவசாயிகளுக்கு துணை நிற்கவும், நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களை கெளரவப்படுத்தவும் நடிகர் கார்த்தியால் துவங்கப்பட்டது உழவன் ஃபவுண்டேஷன். இந்த ஃபவுண்டேஷன் மூலமாக வருடாவருடம், விவசாயிக்களுக்கு அவர்கள் செய்த தனித்துவமான முன்னெடுப்புகளுக்காகவும், அவர்களது உழைப்பிற்காகவும் விருது கொடுக்கப்படுகிறது. விவசாயிகளை கௌரவப்படுத்தும் விதமாக விருதும்,வெகுமதியும் உழவன் ஃபவுண்டேஷன் மூலமாக உழவர் விருது என்ற விழா மூலமாக கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் ‘ உழவர் விருது 2023’ நேற்று நடைபெற்றது. இவ்விழாவினில் விவசாயிகள் கௌரவிக்கப்பட்டார்கள். நடிகர் சிவக்குமார், நடிகர் ராஜ்கிரண், இயக்குனர் நடிகர் பொன்வண்ணன், இயக்குனர் பாண்டிராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவினில் அவர்கள் பேசியதாவது..,
சிவக்குமார் கூறியதாவது..,
இன்று விருது வாங்கிய அனைவருக்கும் எனது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். பெண்கள் தான் சமூகத்தையும், குடும்பத்தையும் முன்னேற்றி செல்ல கூடிய சக்தி படைத்தவர்கள். நானும் அப்படிபட்ட ஒரு பெண்ணால் வளர்க்கப்பட்டவன் தான். ஒரு மாடு இருந்தால், ஒரு குடும்பத்தை முன்னேற்றிவிடலாம் என்று கூறுவார்கள், எங்கள் வீட்டில் ஒரு கறவை மாடு இருந்தது. எங்கள் வீட்டில் ஒரு கறவை மாடு இருந்தது. அதனுடன் சேர்ந்து தான் எங்களது வாழ்கை சென்றது. இதனோடு தான் நான் வளர்ந்தேன். மாட்டுகாரன் என்று சொல்வதில் எந்த அவமானமும் இல்லை, நான் அப்படி வளர்ந்ததில் பெருமை கொள்கிறேன். உலகத்தில் பெண் தான் மிகப்பெரிய சக்தி, என் வாழ்கையில் என் தாய் மற்றும் என் மனைவி அப்படி எனக்கு இருந்தார்கள். அவர்களால் தான் நான் உருவானேன், எனது மகன்கள் கார்த்தி, சூர்யா உருவானார்கள். அவர்களால் அகரம், உழவன் அமைப்பு உருவானது. அதனால் இயற்கையும், அன்னையும் மதியுங்கள்.”
ராஜ்கிரண் கூறியதாவது..,
” கலைஞர்களுக்கு சமூக பொறுப்பு அவசியம். அதை உணர்ந்ததால் தான், சூர்யா, அகரம் அமைப்பையும், கார்த்தி உழவன் அமைப்பையும் நடத்துகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகள். இந்த விவசாயிகளை மேடை ஏற்றி பாராட்ட ஒரு வாய்ப்பு அமைத்த கார்த்தி மிகப்பெரிய காரியத்தை செய்து இருக்கிறார். காந்தி விவசாயிகளை தான் நாட்டின் மூலாதாரம் என்று குறிப்பிட்டார், அப்படிபட்ட விவசாயிகளுக்கு பாராட்டுதலை கொடுத்து, ஊக்குவிப்பது அவசியம். இந்த விழாவில் சில பெண்களை குறிப்பிட்டு, அவர்கள் செய்த சாதனைகளை கூறினார்கள். அது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இந்த உலகில் பெண்கள் இல்லை என்றால், உலகம் இல்லை என்று தான் கூற வேண்டும். அப்படிப்பட்டவர்களை பாராட்டுவது அவசியம். நன்றி. ”
பாண்டிராஜ் கூறியதாவது..,
” விவசாயத்தை மாற்று வழியில் செய்பவர்கள், லாபத்தை சம்பாதிக்கிறார்கள். நான் இந்த வருடம் 114 மூட்டை அறுவடை செய்தேன், அதன் மூலம் நான் சம்பாதிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பல கோடிகள் சம்பாதித்தாலும், விவசாயம் மூலம் வரும் நெல்லில் சாப்பிடும் போது மனது மகிழ்ச்சியடைகிறது. எனது பெற்றோர்கள் விவசாயிகள், நான் சினிமாவிற்கு வந்துவிட்டேன். எனது பெற்றோர் பத்து வருடமாக விவசாயம் செய்யவில்லை. எங்களது நிலத்தை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. எனது பெற்றோர் வாழ்ந்த நிலம் பாலாய் இருந்தது. அதனால் நான் அதில் விவசாயம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து துவங்கினேன். நிறைய சிக்கல்களை சந்தித்தேன். வேலி, கிணற்றில் தண்ணீர் இல்லை என பல தடைகளை தாண்டவே பணமும், உழைப்பும் செலவானது. சுற்றி இருந்தவர்களும், எனக்கு விவசாயத்தில் அதிர்ஷ்டம் இல்லை என கூற ஆரம்பித்தார்கள். ஆனால் விடாது அதில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்த பிறகு, நிலத்திற்கு நீர் வந்தது. இதை எல்லாம் பார்க்கும் போது, இத்தனை ஆண்டுகளாக விவசாயிகள் எதையும் எதிரபாராமல் இதற்காக தான் உழைத்து இருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், அவர்கள் அதை தாண்டி பயிரை விளையவைத்து நமக்கு கொடுக்க பாடுபடுகிறார்கள். அப்படிபட்டவர்களை கௌரவிக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நானும் கார்த்தி சாரும் இணைந்து கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் எடுத்த மகிழ்ச்சியை விட, அவர் இந்த உழவன் அமைப்பு ஆரம்பித்ததில் தான் எனக்கு மகிழ்ச்சி அதிகம். இங்கு வந்தவர்களின் முகத்தை பார்க்கும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதோடு அரசு நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும். அந்த திட்டத்தை ஆக்கபூர்வமாக விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். அதை செய்தால் நாடும், விவசாயமும் வளர்ச்சி பாதையில் செல்லும். ”
பொன்வண்ணன் கூறியதாவது.,
” நான் வாழ்ந்தது ஒரு கிராமத்து வாழ்கை தான். என் குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறை பட்டதாரி. படிப்பதோடு, புத்தகம் வாசிப்பது என வாழ்கை பயணித்தது. எனது குடும்பம் கிராமத்தின் ஆழமான வாழ்கையை பல ஆண்டுகளாக வாழ்ந்தார்கள். விவசாய வாழ்கையையே எனது குடும்பம் முழுவதுமாக வாழ்ந்தது. காலம் மாற மாற, நான் சமூகப்பாதையில் சென்ற பின், நான் விவசாயத்தில் இருந்து நகர ஆரம்பித்தேன். நான் சினிமாவிற்கு வந்துவிட்டேன், ஆனால் எனது பெற்றோர் விவசாயத்தில் தான் கடைசி காலம் வரை இருந்தார்கள். பின்னர் யோசிக்கும் போது தான் தெரிந்தது, நான் எதை இழந்துவிட்டேன் என்று. ஒரு விவசாய வாழ்கையை இழந்து நான் என் பாதையை மாற்றி இருக்கிறேன், அது எனக்கு வருத்தத்தை கொடுத்தது. விவசாயம் என்பது மிகவும் ஆபத்தான, வலிகளை தரக்கூடிய ஒரு பாதை என்று ஆய்வுகள் கூறுகிறது. ஏனென்றால் விவசாயம் என்பது வெறும் தொழில் மட்டுமல்ல, அது மண்ணோடு போராட வேண்டி இருக்கிறது, இயற்கையோடு போராட வேண்டி இருக்கிறது, பின்னர் சந்தைப்படுத்துதலோடும் போராட வேண்டி இருக்கிறது. விவசாயிகள் பல இழப்புகளை சந்திக்கிறார்கள். ஆனால் இழப்புகளை தாண்டி அவர்கள் பயணிக்கிறார்கள். முதலில் நிலங்களை மண் அமைப்புகளை வைத்து வகைப்படுத்துவார்கள், ஆனால் இப்போது அங்கு அருகே வரப்போகும் கட்டிடங்களையும், இடங்களையும் வைத்து வகைப்படுத்துகிறார்கள், அது எனக்கு வருத்தமளிக்கிறது. சமூக வலைதளத்தில் இளைஞர்கள் விவசாயம் பற்றி பேசுகிறார்கள், ஆனால் விவசாயம் செய்ய மிகப்பெரிய தியாகமும், உழைப்பும் தேவைப்படுகிறது. அதை செய்யும் இந்த இளைஞர்களை பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். கார்த்தி, சினிமாதுறையை தாண்டி இந்த முன்னெடுப்பை செய்ததில் மகிழ்ச்சி. அவர் இதற்காக நுணுக்கமாக யோசித்து வேலைபார்க்கிறார், அதற்கு எனது பாராட்டுகள். காவிரி நதி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல பகுதிகளை சென்றடையாமல் வீணாய் போய் கொண்டு இருந்தது. அப்போது அதை களைய வேண்டும் என்ற முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டது தான் காளிங்கராயன் வாய்க்கால். அதன் அமைப்பு பல பகுதிகளை செழிக்கவைத்தது. எதிர்காலத்தை யோசித்து அதை அமைத்த காளிங்க ராயன் அவர்களுக்கு இந்த இடத்தில் நான் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.”