ரசிகர்கள் கேட்பதை கொடுக்க முடியாது!

ரசிகர்கள் கேட்பதை கொடுக்க முடியாது!

துணிவு பட ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ஹெச்.வினோத் ரசிகர்கள் பற்றி சுவாரஷ்யமான ஒன்றை கூறியுள்ளார். பொங்கல் பண்டிகையை ஒட்டி அஜித் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையில் உருவான துணிவு படம், விஜய் நடித்த வாரிசு படத்துடன் வெளியாகிறது. வெளியீட்டிற்கு சிறிது நாட்களே இருப்பதால் இரு தரப்பும் புரோமோசனில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் துணிவு பட புரோமோசனை ஒட்டி இயக்குனர் ஹெச் வினோத் பேசியது வைரலாகி இருக்கிறது.

ஹெச் வினோத் கூறியதாவது.
”பெரிய நடிகர்கள் அனைவரின் படத்திற்கும் அவர்களின் ரசிகர்கள் கொடுக்கிற நேரமும் அர்ப்பணிப்பும் தான் படத்திற்கான ப்ரொமோஷன். நூறு கோடி செலவு செய்தாலும் அந்த ப்ரொமோஷமஒ யாராலும் கொடுக்க முடியாது. ஏனென்றால் ரசிகர்கள் அவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள். இதனால் இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு உருவாகிறது. நான் உனக்காக எவ்வளவு பண்ணியிருக்கேன் என்கிற நிலைமைக்கு அது வந்துவிடுகிறது.

அதனால், ஒரு ஹீரோவும், படக்குழுவும் ரசிர்களுக்கு திருப்பி என்ன செய்தாலும் அது அவர்களை திருப்தி படுத்தாது. சினிமாவிற்காக ரசிகர்கள் இவ்வளவு நேரத்தை செலவிடத் தேவையில்லை. பொங்கலுக்கு படம் வெளியாகிறது என்றால், அதற்கு 3 நாளைக்கு முன் படத்துக்கான முன்பதிவு தொடங்கும். எந்தப் படத்தின் ட்ரெய்லர், போஸ்டர் உங்களுக்குப் பிடித்துள்ளதோ அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் நான்கு பேருக்கு கூறுங்கள். இன்னொரு படம் நன்றாக இருந்தால், உங்களிடம் பணம் இருந்தால் அதையும் போய் பார்க்கலாம். இவ்வளவு தான் அந்த சினிமாவுக்கு நீங்கள் செலவு பண்ண வேண்டிய நேரம். உங்கள் நேரத்தை உங்களைத் தவிர யாராலும் சிறப்பாக செலவிட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *