காதல் உணர்வை கொண்டாடும் படைப்பாக உருவாகி இருக்கும் ‘கிறிஸ்டி’
*காதல் உணர்வை கொண்டாடும் படைப்பாக உருவாகி இருக்கும் ‘கிறிஸ்டி’
‘பேட்ட’, ‘மாஸ்டர்’ படப் புகழ் நடிகை மாளவிகா மோகனனும், மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் மேத்யூ தாமஸும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிறிஸ்டி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரித்விராஜ், ஜெயசூர்யா, டோவினோ தாமஸ், நிவின் பாலி, சன்னி வெய்ன், உன்னி முகுந்தன், ஜாய் மாத்யூ, நடிகை மஞ்சு வாரியர், பஷில் ஜோசப், அந்தோணி பேப் ஆகியோர் தங்களது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘கிறிஸ்டி’. இதில் நடிகர் மேத்யூ தாமஸ் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் பென்யமின் மற்றும் ஜி. ஆர். இந்துகோபன் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை மனு ஆண்டனி கவனிக்க, சுஜித் ராகவ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராக்கி மவுண்டன் சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் சஜய் செபாஸ்டியன் மற்றும் கண்ணன் சதீசன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. காதல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு ‘கிறிஸ்டி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள பூவார் மற்றும் மாலத்தீவுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
மேத்யூ தாமஸ் மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கும் ‘கிறிஸ்டி’ திரைப்படம் மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.