‘தாதா’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.
‘தாதா’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர். சினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அதன் நிர்வாகி துரைராஜன் என்கிற ராகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்து இருந்தார். அதில், தனது நண்பருடன் இணைந்து ஆர்.ஆர். சினி புரடெக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி மணி(Money) என்ற திரைப்படத்தை கடந்த 2016 ம் ஆண்டு தயாரித்துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார். அந்த படத்தில் கதாநாயகனாக நிதின் சத்யாவும் மற்ற கதாபாத்திரங்களில் யோகி பாபு, நாசர், சிங்கமுத்து, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள்.
இந்த நிலையில், படத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த கிஷோர் குமார் என்கிற கின்னஸ் கிஷோர், தனது தயாரிப்பு நிறுவனத்தில் 35 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்ததாக வழக்கு ஒன்றை அவர் பதிவு செய்து இருக்கிறார். பின் வேப்பேரி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், திரைப்படத்தின் ஹார்ட் டிஸ்கை திருடிய வழக்கு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார் .
இந்த நிலையில் அன்னை தெரசா இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ‘மணி’ படம் தொடர்பான சிவில் வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஹார்ட் டிஸ்க் மூலம் திருடப்பட்ட அந்த படத்தின் காட்சிகளை கொண்டு ‘தாதா’ என்ற பெயரில் டிரைலர் வெளியிட்டு, வரும் 9 ம் தேதி படத்தையும் வெளியிட போவதாக விளம்பரம் வந்து இருப்பதை வழக்கில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சி. சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மணி பட தயாரிப்பின் போது நிதின் சத்யாவை முன்னிலை படுத்தி வெளியான போஸ்டர்களை அவர் காட்டியுள்ளார். இந்நிலையில் தற்போது யோகி பாபு பிரபலமாகி உள்ளதால் ‘தாதா’ படத்தில் யோகிபாபுவை முன்னிலைப்படுத்தி போஸ்டர் வெளியிட்டு கிஷோர் என்கிற கின்னஸ் கிஷோர் மோசடி செய்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி, தாதா படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு குறித்து கிஷோர் குமார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 23ம் தேதி தள்ளி வைத்து இருக்கிறார்.