“சினிமா என்பது கலை. வியாபராமல்ல” – ‘விஜயானந்த்’ நாயகன் நிஹால்.
சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று வெளியாகிறது.
‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஸ்ரீலதா பிரகலாத், பரத் போப்பண்ணா, அனந்த் நாக், வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில் பட வெளியீட்டுக்கு முன் படக்குழுவினர், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இதன் போது படத்தின் இயக்குநர் ரிஷிகா சர்மா, தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர், நடிகர்கள் நிஹால், பரத் போப்பண்ணா, தமிழ் பதிப்பின் வசனம் மற்றும் பாடல்களை எழுதிய மதுரகவி, படத்தொகுப்பாளர் ஹேமந்த், படத்தை வெளியிடும் யூ எஃப் ஓ பிரதிநிதி மனோஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படத்தின் இயக்குநர் ரிஷிகா சர்மா பேசுகையில், ” கன்னட திரை உலகில் தயாராகி இருக்கும் முதல் சுயசரிதை திரைப்படம். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் பணிகள், ஒரு கன்னட திரைப்படமாகத் தான் தொடங்கியது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, படப்பிடிப்பை பார்வையிட்ட திரையுலக பிரபலங்கள், இந்த திரைப்படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியாகும் பான் இந்திய திரைப்படமாக உருவாக்கலாமே..! என ஆலோசனை வழங்கினர். அதன் பிறகு தயாரிப்பாளரின் சம்மதத்துடன் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படமாக தயாரானது. ‘விஜயானந்த்’ படத்தின் டீசர் வெளியான பிறகு, மும்பையில் உள்ள முன்னணி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இதனை இந்தியில் வெளியிடலாமே..! என்றனர். இப்படத்தின் முன்னோட்டம் வெளியான பிறகு பல நாடுகளிலிருந்து இந்தப் படத்தை இங்கும் வெளியிடலாமே..! எனக் கேட்டனர். இதனால் தற்போது ‘விஜயானந்த்’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியாகிறது.
ஊக்கமளிக்கும் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் நிஜ கதாநாயகன் தொழிலதிபர் பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வர் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண பெண்மணியான என்மீது நம்பிக்கை வைத்து, இது போன்ற பிரம்மாண்டமான படைப்பை உருவாக்க வாய்ப்பளித்த வி ஆர் எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வருக்கும் நன்றி.
நான் இயக்குநர் மணிரத்னத்தின் தீவிர ரசிகை. அவரது இயக்கத்தில் வெளியான ‘குரு’ திரைப்படத்தை பார்த்த பிறகு தான், சுயசரிதை திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. நான் எந்த திரைப்பட பயிற்சி கல்லூரியிலும் படித்த மாணவி அல்ல. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘குரு’ எனும் திரைப்படத்தின் திரைக்கதையில் நுட்பமாக இணைக்கப்பட்டிருக்கும் பல அடுக்குகளை உணர்ந்து வியந்திருக்கிறேன். மேலும் மணிரத்னம், புட்டண்ணா கனகல் போன்ற இந்திய படைப்பாளிகளிடமிருந்து ஏராளமான விசயங்களை கற்றிருக்கிறேன். இந்தத் திரைப்படம் உருவானதற்கு மணிரத்னத்தின் திரைப்படங்களே முன்னுதாரணம். இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இந்த இரண்டாவது திரைப்படத்தை, சுயசரிதை போன்ற சவால் மிக்க படைப்பாக இயக்கியிருப்பதை ஆசீர்வாதமாக கருதுகிறேன். இந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கு ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், தமிழ் பதிப்பின் வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியர் மதுரகவி உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினருக்கும், நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான்கு தலைமுறையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான உணர்வுகளை விவரிக்கும் திரைப்படமாக இந்த ‘விஜயானந்த்’ உருவாகி இருக்கிறது. குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் மூத்த உறுப்பினர்களுக்கும், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இடையேயான பாச பிணப்பை மையப்படுத்தி இருந்தாலும், பிள்ளைகளின் எதிர்கால கனவுகளுக்கும், அவர்களின் எதிர்கால கனவுத்திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி விவரித்திருக்கிறோம். இந்தத் திரைப்படம் இளைய தலைமுறையினரிடத்தில் எதிர்காலம் குறித்த கனவை காண வேண்டியதன் அவசியத்தைக் கற்றுத் தருகிறது.
1976 ஆம் ஆண்டின் ஒரேயொரு வாகனத்துடன் தொடங்கிய இவரது கனவு, இன்று இந்தியா முழுவதும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களுடனும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வாகனங்களுடனும் வளர்ச்சி அடைந்து, அவரை சாதனை நாயகனாக்கியிருக்கிறது. அவரது கனவு நனவாகி இருக்கிறது. இது தொடர்பாக அவரிடம் இந்த துறையை தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? என கேட்டபோது, ‘இது எனக்கு ஏற்றது என எண்ணினேன். உடனடியாக தொடங்கினேன்’ என பதிலளித்தார். இது எனக்கு பெரும் ஊக்கத்தை அளித்தது. இதனை பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினேன்.
‘விஜயானந்த் ரோட் லைன்ஸ்’ என்ற அவரது நிறுவனத்தின் பெயரில் இருக்கும் ‘விஜயானந்த்’தை இப்படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறேன். ‘விஜய்’ என்றால் ‘வெற்றி’, ‘ஆனந்தம் என்றால் சந்தோஷம்’. படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு மனதளவில் உத்வேகத்தையும், ஊக்கத்தையும் இந்த திரைப்படம் வழங்கும் என உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் பேசுவையில், ” விஜயானந்த் படத்தினை அறிமுகப்படுத்துவதற்காக அஹமதாபாத்,, லக்னோ, இந்தூர், டெல்லி, கொச்சி, ஹைதராபாத் ஆகிய இடங்களைத் தொடர்ந்து தற்போது சென்னைக்கு வருகைத்தந்திருக்கிறோம். சென்றமிடமெல்லாம் சிறப்பான வரவேற்பளித்த அனைவருக்கும் நன்றி.
நான் ஒரு வயதாக இருக்கும் போது என்னுடைய தந்தை விஜய் சங்கேஸ்வர் குடும்பத் தொழிலிலிருந்து விலகி, வி ஆர் எல் எனும் இந்த வாகன போக்குவரத்து துறையில் 1976 ஆம ஆண்டில் ஈடுபட தொடங்கினார். தற்போது நாங்கள் ஏழு லட்சம் தொழில் முறையிலான வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்து வருகிறோம். விவசாயம் மற்றும் வேளாண்மை சார்ந்த பொருட்கள் ஜவுளிகள், ஆயத்த ஆடைகள், மருந்து பொருட்கள், அகர்பத்தி காலணிகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் என ஆண்டுதோறும் பத்தாயிரம் டன் எடையுள்ள சரக்குகளை கையாளுகிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 1500 கிளைகளுடன் இயங்கி வருகிறோம். தமிழகத்தில் மட்டும் 150 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரை இயக்குனர் ரிஷிகா சர்மாவும், நாயகன் நிஹாலும் கொரோனா தொற்று காலகட்டத்தில் தந்தையை சந்தித்தனர். 30 நிமிட சந்திப்பு என்று கூறி தொடங்கிய இவர்களது பேச்சுவார்த்தை, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இவர்கள் திரைக்கதையை விவரித்த விதம், அதற்கான மெனக்கடல்கள்.. என அனைத்தும் என்னுடைய தந்தையாருக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு எங்களது நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். இந்த படத்தின் உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்தில் அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் 99 சதவீதம் இடம் பிடித்திருக்கிறது. ஒரு சதவீதம் படைப்பு சுதந்திரத்திற்காகவும், திரைப்படத்திற்கான வடிவமைப்பிற்காகவும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளை சொல்லலாம்.” என்றார்.
பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதுரகவி பேசுகையில், ” மஞ்சள் வண்ண லாரியின் மகத்தான சரித்திரம் தான் இந்த படத்தின் கதை. ‘கே ஜி எஃப்’ படத்தைப் போல் இது கமர்சியல் படமல்ல. நிஜ நாயகனை பற்றிய படம். வியாபாரமும், அரசியலும் ஆதிக்கம் செலுத்தும் இந்த மண்ணில், யதார்த்தமான வாழ்க்கையை முன்னிறுத்தி, குடும்ப உறவுகளுக்கான முக்கியத்துவத்தை மக்களிடம் சென்றடைய செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் இப்படம் உருவகியிருக்கிறது. இயக்குநரின் இந்த முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன். படத்தில் இடம்பெறும் அனைத்து காட்சிகளிலும் மன நிறைவுடன் பணியாற்றிருக்கிறோம். இந்தப் படத்தின் தமிழ் பதிப்பில் பணியாற்றும்போது படக் குழுவினர் எமக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கினார்கள்.
படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. பாடல்கள் காட்சிகளுக்கு இடையேயான திணிப்பாக இல்லாமல், இயல்பாக இடம் பெற்று இருக்கிறது. இன்று கடைக்கோடியில் வாழும் பாமர மனிதனுக்கு ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன. வாழ்க்கையில் எப்படி ஜெயிப்பது? என்று தெரியாமல், தன்னம்பிக்கையிழந்திருப்பவர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய முன்னுதாரணமாக இருக்கும். வாழ்க்கையின் அடித்தளத்திலிருந்து ஒருவர் எப்படி வென்றார் என்பதை நான்கு தலைமுறைகளை சம்பந்தப்பட்ட கதையாக தயாராகியிருக்கிறது. நான்கு தலைமுறைகளின் வாழ்க்கையையும் இந்த படத்தில் சரியாக பதிவு செய்திருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு இந்த படத்தில் நிறைய செய்திகள் இருக்கிறது.” என்றார்.
நாயகன் நிஹால் பேசுகையில், ” இந்த விஜயானந்த் திரைப்படம் நான் கதாநாயகனாக நடித்த இரண்டாவது திரைப்படம். நான் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்ற தொடங்கினேன். நான் ஒரு மேடை நாடக நடிகரும் கூட. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி தொடரிலும், சில திரைப்படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன். இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கிய ‘ட்ரங்க்’ படத்தில் நான் நாயகனாக அறிமுகமானேன். இருவரும் 2019 ஆம் ஆண்டில் அடுத்த படமாக வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டோம். சுயசரிதை திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு எப்படி ஏற்பட்டது என்றால், அதற்கு மூல காரணம் என்னுடைய குருவாக நினைத்துக் கொண்டிருக்கும் இயக்குநர் மணிரத்னம் தான். அவர் இயக்கத்தில் வெளியான குரு திரைப்படத்தை பார்த்த பிறகு தான் எங்களுக்கும் இது போன்றதொரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பார்த்த முதல் சினிமா குரு. அது என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் டாக்டர் பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன்.
விஜய் சங்கேஸ்வர் சாதித்த சாதனைகள், எதிர்கொண்ட சவால்கள் அனைத்தும் எனக்கு வியப்பை அளித்தது. இதற்காக ஆறு மாதங்கள் ஆய்வு செய்து திரைக்கதை உருவாக்கினோம். அப்போது எங்களிடத்தில் தயாரிப்பாளர்கள் இல்லை. அதன் பிறகு விஜய் சங்கேஸ்வரை சந்தித்தோம். அவரை சந்தித்தவுடன், ‘உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க விரும்புகிறோம்’ என சொன்னோம். ஒரு நிமிடம் அமைதி காத்தார். ‘நான் ஒரு பிரபலமான விளையாட்டு வீரனும் அல்ல. பிரபலமான திரைப்பட நடிகரும் அல்ல. பிறகு ஏன் என்னுடைய சுயசரிதையை திரைப்படமாக உருவாக்க விரும்புகிறீர்கள்?’ எனக் கேட்டார். அப்போது நாங்கள், ‘எங்களைப் போன்ற திரைப்பட நடிகர்கள் எல்லாம் திரையில் தான் நாயகர்கள். ஆனால் உங்களைப் போன்றவர்கள் தான் நிஜ கதாநாயகர்கள். உங்களின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் முன்னுதாரணம் நட்சத்திரமாக இருக்கிறீர்கள்.’ என பதிலளித்தோம். அதன் பிறகு தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரம் வரை பேச்சுவார்த்தை நீண்டது. அதன் பிறகே அவர் சம்மதித்தார்.. படத்தை தயாரிக்கவும் ஒப்புக்கொண்டார்.
நான் ஒரு நட்சத்திர நடிகரல்ல என்றாலும், கதை மீதான நம்பிக்கையின் காரணமாக.. என்னை கதையின் நாயகனாக தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் ஏற்றுக்கொண்டார். எங்கள் படக்குழு வளர்ந்து வரும் நட்சத்திரங்களையும், தொழில் நுட்ப கலைஞர்களையும் உள்ளடக்கியது. எங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து படத்தை உருவாக்கவும் வாய்ப்பளித்தார். ஏனெனில் சினிமா என்பது ஒரு கலை. வியாபாரம் அல்ல. இதனை உணர்ந்து கலை வடிவத்திற்குரிய மரியாதையும் அவர் வழங்கினார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.