அர்ஜூனுக்கு பதில் கொடுத்த தெலுங்கு நடிகர்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் அர்ஜுன் தெலுங்கில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார். இதில் தெலுங்கு சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரான விஷ்வக் சென் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். நாயகியாக தனது மகள் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க திட்டமிட்டார் அர்ஜுன். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் படத்தின் நாயகன் விஷ்வக் சென் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
தற்போது நடிகர் விஷ்வக் சென் அர்ஜுனனின் குற்றச்சாட்டுக்கு பதில் கொடுத்து இருக்கிறார். அவர் கூறியதாவது…, ” அதாவது நான் இதுவரை பல படங்களில் நடித்து இருக்கிறேன். எந்த திரைப்படத்திலும் நான் ஈடுபாடு இல்லாமல் கலந்து கொண்டது கிடையாது. அர்ஜுன் இயக்கும் படத்தின் முதல் பாதி கதை எனக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் தந்தார்கள். மேலும் இந்த படத்தில் கருத்து சொல்லவோ, ஆலோசனை கூறவோ எனக்கு சரியான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது மன அழுத்தத்தை கொடுக்கும் என்பதால் தான் நான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஒருபோதும் அந்த திரைப்படத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று நான் நினைத்தது கிடையாது. அர்ஜுனிடமிருந்து எனக்கு படத்தைப் பற்றி விவாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. மற்றபடி அர்ஜுனை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கிடையாது. தற்போது இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியிருப்பதால் எனது தரப்பில் இருந்து நான் விளக்கம் அளித்து இருக்கிறேன் , அதோடு அர்ஜுன் இயக்கும் படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை இப்போது கூறிகொள்கிறேன் ’ என்று கூறியுள்ளார்.