புனித் ராஜ்குமார் இறந்தது மூன்று நாட்களுக்கு பிறகு தான் எனக்கு தெரியும்- ரஜினிகாந்த்
புனித் ராஜ்குமாருக்கு ‘கர்நாடக ரத்னா விருது’ வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தமிழர்களுக்கு நன்றி
கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். அப்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் 45 வயதில் உயிரிழந்தது கன்னட திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியது. நடிகராக மட்டுமல்லாமல், ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவுவது உள்ளிட்ட சமூக சேவையிலும் ஈடுபட்டதால் கன்னட மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர் புனித் ராஜ்குமார். அவருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருதை வழங்க வேண்டும் என ரசிகர்கள் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா பெங்களூருவில் நேற்று மாலை 4 மணிக்கு விதான் சவுதாவில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் அஸ்வினி புனித் ராஜ்குமாரிடம் கர்நாடக ரத்னா விருதை முதல்வர் பசவராஜ் பொம்மை வழங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் கலந்து கொண்டனர். இதையொட்டி தனி விமானம் மூலமாக பெங்களூரு சென்ற நடிகர் ரஜினிகாந்தை கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் வரவேற்றார்.
பின்னர் கொட்டும் மழையில் நடந்த விழாவில் அப்புவின் மனைவிக்கு தலைப்பாகை வைத்து விருது வழங்கி ரஜினி பேசிய போது “தன்னை வாழ வைக்கும் தமிழர்களுக்கும் நன்றி” என்று கூறி தன் உரையை ஆரம்பித்தார். அதோடு புனித் ராஜ் குமார் உடைய இறப்பின் போது நான் அறுவை சிகிச்சையில் இருந்தேன். மூன்று நாட்களுக்கு பிறகு தான் புனித்தின் இறப்பு செய்தியை என்னிடம் கூறினார்கள் என்று கூறினார்.