ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் படம் ‘தி ஐ’
உலக நாயகன் கமலஹாசனின் மகள், பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியை, நடிகை என பன்முக ஆளுமையுடன் உலா வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகும் புதிய ஹாலிவுட் திரைப்படத்திற்கு ‘தி ஐ’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது கிரீஸ் நாட்டில் நடைபெறுகிறது.
எமிலி கார்ல்டன் எழுதி, டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் தயாராகும் ‘தி ஐ’ எனும் படத்தினை ஃபிங்கர்பிரிண்ட் ஃபிலிம்ஸ் மற்றும் அர்கோனாட்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது கிரிஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் மற்றும் கோர்பு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதில் கதையின் நாயகியான ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்தி, தமிழ், தெலுங்கு என இந்திய திரையுலகம் முழுவதும் தன் திறமையை நிரூபித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், ‘டிரெட்ஸ்டோன்’ எனும் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரின் முக்கிய வேடத்தில் நடித்து, சர்வதேச அளவில் அறிமுகமானார். இவர் இசை திறமையால் உலகம் முழுவதிலும் உள்ள இசை ஆர்வலர்களிடத்தில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். இதன் காரணமாக தற்போது திரைப்படங்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார்.
இவர் தற்போது நடித்து வரும் ‘தி ஐ’ எனும் ஹாலிவுட் திரைப்படம் உளவியல் திரில்லர் ஜானரில் உருவாகும் திரைப்படம். கதைப்படி ஒரு விதவை பெண், தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய சாம்பலை கரைப்பதற்காக கிரேக்க தீவுக்கு பயணிக்கிறார். அதன் போது ஏற்படும் உளவியல் சார்ந்த திகில் திருப்பங்களும், சம்பவங்களும் தான் படத்தின் திரைக்கதை. இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகியான ஸ்ருதிஹாசனுடன் ‘தி லாஸ்ட் கிங்டம்’ மற்றும் ‘ஒன் டே’ ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகர் மார்க் ரௌலி, ‘ட்ரூ ஹாரர்’ படப் புகழ் நடிகை அன்னா சவ்வா, ‘தி டச்சஸ்’ பட புகழ் நடிகை லிண்டா மார்லோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் மெலனி டிக்ஸ் பேசுகையில், ” இயக்குநர் டாப்னே ஷ்மோன் மற்றும் திரைக்கதை ஆசிரியர் எமிலி கார்ல்டன் ஆகியோரின் கூட்டணியில் அற்புதமான படைப்பை உருவாக்குகிறோம். ‘தி ஐ’ நான்காண்டு கால உழைப்பில் உருவானது. எங்களுடைய குழுவில் திறமைசாலிகள் அதிகம் உள்ளனர். மேலும் முழுமையான ஒத்துழைப்பை அளிக்கும் பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குழுவும் உள்ளது. எங்களுடைய இந்த படைப்பு அசாதாரணமானது. அத்துடன் எங்களின் இலட்சியத்தை எட்டும் உற்சாகத்தையும் பெற்றிருக்கிறோம்.” என்றார்.
நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், ” இசையாலும், சினிமா எனும் காட்சி ஊடகத்தின் மூலமாகவும் கதைகளை பகிர்ந்து கொள்வது என்பது என்னுடைய கனவு. இந்த கனவினை தற்போது சர்வதேச அளவில் விரிவுப்படுத்தி இருக்கிறேன். ‘தி ஐ’ போன்ற அற்புதமான படைப்பில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திறமையான பெண்மணிகளால் வழி நடத்தப்படும் அணி என்பது இதன் கூடுதல் சிறப்பு. ‘தி ஐ’ ஒரு அழகான கதை. இதனை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.” என்றார்.
இதனிடையே WWF எனப்படும் (World Wildlife Fund for Nature) வனவிலங்குகளை இயற்கையாக பாதுகாப்பதற்கான நிதியம் எனும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் இந்திய பிராந்தியத்திற்கான விளம்பர தூதுவராக நடிகை ஸ்ருதிஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனம் உலக அளவில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு ஏற்ப செயல்படுவதற்கு ஏற்ற வகையில் நிறுவனங்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டு முதல் 26 நாடுகளில் 1500 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறது. இந்த திரைப்படத்திலும் பசுமையான இயற்கை சூழல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் படப்பிடிப்பு நடத்துவது குறித்த ஆலோசனையை வழங்கியிருக்கிறது. இதற்காக ஸ்ருதிஹாசனின் பங்களிப்பு அதிகம் என இந்த குழுவினர் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.