சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடல்
தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடல்
*******
உலகநாயகன் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் சமீபத்தில் மிகப் பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கவிருக்கிறது. அக்டோபர் 5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்படுகிறது. வணிக மற்றும் கலைப் படங்களின் சரியான கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் ‘ஓப்பன் சினிமா’ என்ற பிரிவில் விக்ரம் திரையிடப்படும்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூல் சாதனையைப் படைத்தது. அதனைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியானாலும் இன்னும் சில திரையரங்குகளில் விக்ரம் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. அந்த வகையில் நாளுக்கு நாள் விக்ரம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. அதில் இந்த சர்வதேச திரையிடலும் சேர்ந்துகொண்டது.