கடும் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பலுக்கு அனுமதி வழங்கிய இலங்கை! இந்தியாவுக்கு ஆபத்தா?
இந்தியா, அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ‛யுவான் வாங் 5′ எனும் சீனாவின் உளவு கப்பலை ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்டை நாடான சீனா தொடர்ந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது. குறிப்பாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தும் செயலை அவ்வப்போது சீனா மேற்கொண்டு வருகிறது. அதாவது ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் உளவுக்கப்பல் ‛யுவான் வாங் 5′ நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின
இதன்மூலம் சீனா இந்தியாவை உளவு பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் சீனாவின் உளவு கப்பலை இலங்கைக்கு அனுமதிக்க கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியது. இதற்கிடையே தான் சீனாவின் உளவு கப்பலை நிறுத்த இலங்கை அனுமதி வழங்கவில்லை என்ற தகவல் வெளியானது. இதற்கிடையே தான் சீனாவின் உளவு கப்பல் இலங்கை நோக்கி வருவதாகவும், அதனை ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்துவதற்கான அனுமதி பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தான் சீனாவின் உளவு கப்பலலை ஹம்மன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஆகஸ்ட் 16ம் தேதி ஹம்மன்தோட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவு கப்பல் வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கப்பல் அடுத்த 5 நாட்கள் அங்கு நிறுத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
சீனாவின் இந்த யுவான் வாங் 5 எனும் உளவு கப்பல் நவீன தொழில்நுட்பம் கொண்டது. செயற்கைகோள் கண்காணிப்பு உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்தியாவை உளவு பார்க்கும் நோக்கத்தில் இந்த கப்பல் ஹம்பன்தோட்டா துறைமுகத்துக்கு அனுப்பப்படுவதாக கூறப்பட்டது. மேலும் சீனாவின் உளவு கப்பல் ஹம்மன்தோட்டாவில் 700 கிலோமீட்டர் சுற்றளவில் இந்தியாவின் முக்கிய பகுதிகளை உளவு பார்க்க முடியும். இதனால் தான் இந்தியாவுக்கு ஆபத்து என கூறப்படுகிறது.
இதனால் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவும் எதிர்ப்பை பதிவு செய்தது. இதனால் முதலில் அனுமதி வழங்காமல் இருந்த இலங்கை தற்போது அனுமதி வழங்கி உள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை பயன்படுத்தி ஆதாயம் தேட சீனா தொடர்ந்து முயன்று வருகிறது. அந்த வகையில் தான் சீனாவிடம் கடன் பெற்று மேம்படுத்தப்பட்ட ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் உளவு கப்பலை நிறுத்த அந்நாடு தொடர்ந்து அனுமதி கோரிய நிலையில் இலங்கை அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.