முஃபாசா தி லயன் கிங் விமர்சனம் !!
டிஸ்னி தயாரிப்பில் தி லயன் கிங் படத்தின் தொடர்ச்சியாக அப்படத்தின் முன் கதையாக வந்துள்ள படம் தான் முஃபாசா தி லயன் கிங்.
ராஜ பரம்பரையில் இல்லாதவன் அரசை ஆளலாமா ? என்பது தான் இப்படத்தின் அடிநாதம்.
தாய் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வரும் முஃபாசா ஒரு பெரும் துயரால், அவன் மண்ணை விட்டு பிரியும் சூழல் உருவாகிறது. நீரில் தத்தளிப்பவனுக்கு ஆபத்பாந்தவனாய் உதவுகிறான் இளவரசன் டாக்கா. தனக்குப் பின் இந்தக் காட்டை ஆளும் தலைவன் டாக்காதான் என்பதால், முஃபாசாவை பார்த்த கணம் முதல் வெறுக்கிறான் டாக்காவின் தந்தை ஒபாஸி.
இன்னும் தன் கடந்த காலத்திலிருந்து முழுமையாய் வெளியே வராத முஃபாசா, டாக்காவின் தாய் ஈஷேவின் அரவணைப்பில் வளர்கிறான். வெள்ளை சிங்கக் கூட்டத்தின் தலைவனான கீரோஸிற்கு ஆறா வடுவை ஏற்படுத்துகிறான் முஃபாசா. அதற்குப் பழிவாங்க ஒபாஸியின் கூட்டத்திற்கு குறி வைக்கிறான் கீரோஸ். கீரோஸின் கண்களில் மண்ணைத் தூவி, தான் தொலைத்த இடத்தை மீண்டும் கண்டடைந்தானா முஃபாசா என்பதே Mufasa : The Lion King படத்தின் மீதிக்கதை.
சம்பிரதாயமான இரண்டாம் பாகம் என இழுக்காமல், அதற்கென சுவாரஸ்யமான முன் கதையை பிடித்து அதற்கு அதை விட சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்த டிஸ்னி குழுவுக்கு வாழ்த்துகள். ராஜ பரம்பரையில் இல்லாதவன் அரசை ஆளலாமா ? எனும் கேள்வி படத்தில் மிக ஆழமாக வருகிறது அதற்கான தீர்வும் அழகாக வெளிப்பட்டுள்ளது.
முதல் பாகத்தை ஜான் ஃபேவ்ரி இயக்க, இந்தப் பாகத்ததை இயக்கியிருக்கிறார் மூன்லைட் புகழ் பேரி ஜென்கின்ஸ். முஃபாசாவின் முன்கதையுடன், டாக்காவின் முன்கதையும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. அரசாளும் தகுதி குறித்த வசனங்களும் அருமை.
காடும் விலங்குகளும் அத்தனை நுணுக்கமாக விரிவாக சிஜியில் கண்முன் விரிகிறது. அந்த உலகத்திற்கே நம்மை கூட்டிப் போய் விடுகிறார்கள்.
படத்தை தமிழில் பாருங்கள் தமிழ் டப்பிங்க் அத்தனை கச்சிதம்.
தமிழ் டப்பிங்கில் ரோபோ ஷங்கரும், சிங்கம்புலியும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள். அர்ஜுன் தாஸிற்கு இயல்பாகவே கர்ஜிக்கும் குரல்தான் இருப்பதால், அவருக்கு அது சுலபமாக பொருந்திப்போகிறது. தமிழ் டப்பிங்கின் பெரும்பலம் அசோக் செல்வனின் குரல். காதலை வெளிப்படுத்தும் போது குரலில் ஒரு அசட்டுத்தன்மையை கொண்டு வந்திருக்கிறார். பல இடங்களில் அசோக் செல்வனின் குரல் நம்மை டாக்காவின் கதாபாத்திரத்துடன் ஒன்றிணைய வைக்கிறது.
மியூசிக்கல் படம் என்பதால் ஆங்காங்கே வரும் பாடல்கள் ஆங்கிலத்தில் சிறப்பாக இருக்கும். தமிழில் அது அவ்வளவு சிறப்பாக கைக்கூடவில்லை. பாடல் வரிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மற்றபடி குழந்தைகளோடு கொண்டாடி விட்டு வருவதற்கு முஃபாசா அட்டகாசமான விருந்து