சூது கவ்வும் 2 திரை விமர்சனம்!
இயக்கம் – எஸ் ஜே அருண்
நடிகர்கள் – மிர்ச்சி சிவா , கருணாகரன் , எம் எஸ் பாஸ்கர்
இசை – எட்வின் விஸ்வாந்த் & ஹரி
தயாரிப்பு – திருகுமரன் என்டர்டெய்ன்மென்ட் – சி வி குமார் & தங்கராஜ்
தமிழக நிதி அமைச்சரான கருணாகரன், ஊழல் அமைச்சர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதோடு, கட்சிக்கு ஏராளமான நிதிகளை பெற்றுக்கொடுப்பதிலும் முதலிடத்தில் இருக்கிறார். அதனால் அவர் என்ன தவறு செய்தாலும் கண்டுக்கொள்ளாத முதல்வர், மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பொறுப்பை கருணாகரனிடம் ஒப்படைக்கிறார். அதன்படி, தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்கு பணத்தை விநியோகம் செய்ய திட்டமிடும் கருணாகரன் அதற்காக ரூ.60 ஆயிரம் கோடியை வெளிநாட்டு வங்கி ஒன்றில் டெபாசிட் செய்து, அந்த பணத்தை உடனடியாக விநியோகம் செய்வதற்காக ஒரு கருவியை வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார். மறுபக்கம், முதல் பாகத்தில் வரும் தாஸ் கதாபாத்திரம் போல், கற்பனை பெண்ணுடன், கடத்தல் தொழில் செய்து வரும் மிர்ச்சி சிவா, அமைச்சராக இருக்கும் கருணாகரனை கடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார். வங்கியில் இருக்கும் பணத்தை முதல்வரிடம் கொடுக்க செல்லும் போது மிர்ச்சி சிவா கருணாகரனை கடத்தி விடுகிறார். அதனால் அரசியலில் மட்டும் இன்றி கருணாகரனின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது. அந்த மாற்றம் என்ன? என்பதை முதல் பாகத்தின் பாணியிலேயே சொல்வது தான் ‘சூது கவ்வும் 2’.
முதல் பாகத்தில் தாஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி என்ன செய்தாரோ அதையே தான் இதில் மிர்ச்சி சிவா குருநாத் என்ற கதாபாத்திரம் மூலம் செய்திருக்கிறார். மது போதை இறங்கினால் கண் முன் பாம்புகள் இருப்பது போல் தோன்றுவதால், எந்த நேரமும் சரியான அளவில் போதையுடன் வலம் வரும் கதாபாத்திரத்தை நகைச்சுவையாக கையாண்டிருக்கும் மிர்ச்சி சிவா, சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் மது குடிப்பது எப்படி? என்று பாடம் எடுப்பதையே பணியாக செய்திருக்கிறார்.
சூது கவ்வும் கதையின் மையப்புள்ளியான அருமை பிரகாசம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரன், முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகத்திலும் சிறப்பாக நடித்து முழு படத்தையும் தன் தோள் மீது சுமந்திருக்கிறார். மிர்ச்சி சிவாவை நாயகனாக முன்னிறுத்தினாலும், படத்தில் அவரை ஓரம் கட்டிவிட்டு ரசிகர்ளின் கவனத்தை ஈர்ப்பதில் கருணாகரனுக்கு தான் முதலிடம்.
முதல் பாகத்தில் அமைச்சராகும் கருணாகரன், இந்த இரண்டாம் பாகத்தில் குழந்தையாக இருக்கும் போதே தமிழக அரசியலில் ஏற்படுத்தும் மாற்றம் ரசிக்க வைக்கிறது. அதை தொடர்ந்து நடக்கும் அரசியல் சம்பவங்கள், ராதாரவி, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரது அரசியல் மோதல்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அருள்தாஸ், கல்கி, கவி, யோக் ஜேபி, கராத்தே கார்த்தி, கற்பனை பெண்ணாக நடித்திருக்கும் ஹரிஷா ஜஸ்டின் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஷ்வநாத்தின் பாடல்களும், ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லை, முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை காட்டிய விதம் என முழு படத்தையும் முதல் பாகத்தை மனதில் வைத்தே காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.
மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை, அதன் முந்தைய தொடர்ச்சியாக இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் எழுதியிருக்கும் கதையில், அரசியல் சம்பவங்கள் சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கிறது. ஆனால், மிர்ச்சி சிவாவின் கதபாத்திரம் முதல் பாகத்தின் கதாபாத்திரத்தின் நகல் போல் பயணித்து பல இடங்களில் கதையுடன் ஒட்டாமல் போவது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்துவிடுகிறது. இருந்தாலும், கருணாகரன் கதாபாத்திரம் மூலம் பல இடங்களில் பலவீனங்களை மறைத்து காமெடியாக படத்தை நகர்த்திச் செல்லும் இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன், இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு மற்றும் திருப்பங்களுடன் கூடிய நகைச்சுவை காட்சிகள் மூலம் கைதட்டல் பெறுவதோடு, படத்தை ரசிக்கவும் வைத்துவிடுகிறார்.
மொத்தத்தில், ‘சூது கவ்வும் 2’ நகைச்சுவை விருந்து!
நம்ம tamilprimenews. com ரேட்டிங் 3.4/5