இந்த மாதிரி கதையை தயாரிக்க ஒரு தைரியம் வேண்டும் – பிரபுதேவா !!

இந்த மாதிரி கதையை தயாரிக்க ஒரு தைரியம் வேண்டும் – பிரபுதேவா !!

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். ராஜன் & நீலா தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் மடோனா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர் என ஏராளமானோர் நடித்திருக்கின்றனர். நவம்பர் 22ஆம் தேதி படம் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

தயாரிப்பாளர் ராஜேந்திரன் ராஜா, “நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். இது என்னுடைய நான்காவது படம். அடுத்து தமிழில் மல்டி ஸ்டாரர் படமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கிறோம்”.

எடிட்டர் நிரஞ்சன், “இந்த பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. படம் எண்டர்டெயினிங்காக இருக்கும்”.

டான்ஸ் மாஸ்டர் பூபதி, “என்னைப் போன்ற பலருக்கும் மாஸ்டர் ஒரு இன்ஸ்பிரேஷன். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் மாஸ்டர் நடித்திருக்கிறார். படத்தில் நிறைய பாடல்கள் உள்ளது. அதில் இரண்டு பாடல் வித்தியாசமானதாக இருக்கும். இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி”.

நடிகை அபிராமி, “மிகவும் எளிமையான கதை இது. நம்முடைய டென்ஷன் எல்லாம் வீட்டில் வைத்துவிட்டு ரிலாக்ஸாக இந்தப் படம் பார்க்கலாம். தயாரிப்பாளர் ராஜன் சார் மற்றும் இயக்குநர் சக்தி சிதம்பரம் சாருக்கு நன்றி. மடோனா உள்ளிட்ட படத்தில் பணிபுரிந்த நாங்கள் நான்கு பெண்களுமே மகிழ்ச்சியுடன் இருந்தோம். பிரபுதேவா சார், ரோபோ சங்கர் உள்ளிட்ட அனைவருடனும் பணி புரிந்தது மகிழ்ச்சி” என்றார்.

நடிகர் ரோபோ சங்கர், “பிரபு மாஸ்டருடன் சேர்ந்து நடிப்பது ஜாலியாக இருக்கும். நாம் நடிப்பதையும் அவர் என்ஜாய் செய்வார். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம். அடுத்த வாரம் வெளியாகிறது”.

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா, “பிரபுதேவா மாஸ்டருடன் பணிபுரிய வேண்டும் என்பது என் ஆசை. அதனால்தான் கதை கூட கேட்காமல் ஒத்துக் கொண்டேன். சக்தி சார் கடுமையான உழைப்பாளி. தயாரிப்பாளர் ராஜன் சார் நல்ல மனிதர். மடோனா, அபிராமி என எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர். டீமே ஜாலியாக பணிபுரிந்தோம். இந்தப் படம் கிடைத்ததற்கு இயற்கைக்கு நன்றி. படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்”.

நடிகை மடோனா செபாஸ்டின், “‘ஜாலியோ ஜிம்கானா’ ஒரு ஜாலியான படம். பிரபு மாஸ்டருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். சக்தி சிதம்பரம் சார் படம் இயக்குவதில் மாஸ்டர். அபிராமி, ரோபோ சங்கர் உள்ளிட்டப் பலருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான விஷயம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

விநியோகஸ்தர் சக்திவேலன், “இந்தப் படம் ஜாலியான படம். ஒரு தமிழர் மும்பை சென்று அங்கு ஜெயிப்பது சாதாரண விஷயம் கிடையாது. படத்தின் தயாரிப்பாளர் ராஜேந்திரன் அப்படிப்பட்டவர் தான். ஜெயித்த பிசினஸ்மேன் சினிமாவுக்கு வருவது வரப்பிரசாதம். சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அவருடன் எனர்ஜியான டீம் ஒன்று உள்ளே வந்திருக்கிறது. இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் செய்திருக்கிறார்கள். சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் படம் நிச்சயம் எண்டர்டெயினிங்காக இருக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் “.

இசையமைப்பாளர் அஸ்வின், “இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு நன்றி. இந்தியன் மைக்கேல் ஜான்சன் பிரபு சாருக்கு மியூசிக் போடுவது என்னுடைய கனவு. வெளியான இரண்டு பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெறும் ஜாலி படமாக மட்டுமல்லாமல். இதில் கதையும் கொடுத்திருக்கிறார் சக்தி சார். அவருக்கும் எனக்கும் நல்ல சிங்க் இருந்தது. எண்டர்டெயின்மெண்ட் படத்திற்கு இசையமைப்பது சாதாரண விஷயம் கிடையாது. மடோனாவை அடுத்தப் படத்தில் நிச்சயம் பாட வைத்துவிடுவேன். அபிராமி மேமின் தீவிர ரசிகன். தொழில்நுட்ப குழு எல்லோருமே சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நன்றி”.

இயக்குநர் சக்தி சிதம்பரம், “கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் வன்முறை, சாதியை மையப்படுத்தியே இருக்கிறது. அப்போதுதான், டெட்பாடி, அதைத்தூக்கி செல்லும் ஹீரோவை மையப்படுத்திய கதை இது. கதை கேட்டதும் டெட்பாடியாக நடிக்கிறேன் என பிரபுதேவா சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்பு, அவரை மையப்படுத்தி நான்கு ஹீரோயின்களை கொண்டு வந்தோம். ஒன்றரை நாளில் நடக்கும் கதை இது. இதற்கான ஸ்க்ரீன்பிளே எழுதுவது எளிது கிடையாது. டெட்பாடியாக மாஸ்டர் இருக்கும்போது அவர் முன்னாடி பலரும் நகைச்சுவை செய்து கொண்டிருப்பார்கள். அதெல்லாம் கட்டுப்படுத்திதான் மாஸ்டர் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் நன்றாக வருவதற்கு கதையைப் போலவே காசும் முக்கியம். தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு கதை ரொம்பவே பிடித்து விட்டது. நான் கேட்காமலேயே படத்திற்கு நிறைய அள்ளிக் கொடுத்தார். அவர் படத்தின் மீது நம்பிக்கை வைத்து சிறப்பாக செய்து கொடுத்தார். பிரபு மாஸ்டருக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. மடோனாவை நான் டான் என்றுதான் கூப்பிடுவேன். அந்த அளவுக்கு டானாக சூப்பராக நடித்திருக்கிறார். அபிராமியுடன் எனக்கு இரண்டாவது படம். காமெடி சிறப்பாக செய்திருக்கிறார். தொழில்நுட்ப குழுவும் சூப்பராகப் பணியாற்றியுள்ளனர். எல்லோருக்கும் நன்றி”.

பாடலாசிரியர், தயாரிப்பு நிர்வாகி ஜெகன், “நான் ட்ரான்ஸ் இந்தியா நிறுவனத்தில் ஆஃபிஸ் பாயாக சேர்ந்தேன். இப்போது அந்த கம்பெனியில் தயாரிப்பு நிர்வாகியாக இருக்கிறேன். இந்தப் படத்திலும் நான் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினேன். முதலில் இந்தப் பாடல் எப்படி உருவானது என்று சொல்லி விடுகிறேன். இந்தப் பாடல் ஜானரில் ஏற்கனவே சில்க் ஸ்மிதாவுக்கு ஒரு பாடல் வந்திருக்கிறது. அதேபோல் மலையாளத்திலும் வந்திருக்கிறது. அதை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இந்தப் பாடலை உருவாக்கினோம். நான் இந்தப் பாடலை எழுதினேன். நேரடியாக இசையமைப்பாளருக்கு வரிகளை நான் அனுப்பமாட்டேன். இயக்குநர் வழியாகத்தான் வரிகள் இசையமைப்பாளரிடம் போகும். அப்படி நான் அனுப்பியது என்னிடம் இருக்கிறது. இந்தப் படத்தை 8 கோடி ரூபாய் பட்ஜெட் என்றுதான் ஆரம்பித்தோம். ஆனால் 15 கோடி ரூபாய்வரைக்கும் செலவு ஆனது. இதுதொடர்பாக எங்கள் தயாரிப்பாளரிடம் நான் சில விஷயங்களை சொன்னேன். அது இயக்குநர் சக்தி சிதம்பரத்தை கோபப்படுத்திவிட்ட்து. அப்போதே அவர் தயாரிப்பாளரிடம், ‘பாடலில் ஜெகனின் பெயரை போடமாட்டேன்’ என்று சொல்லிவிட்டார். எங்கள் தயாரிப்பாளரோ வளர்ந்து வரும் பையன் ஜெகன்; அவர் பெயரை போடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. இத்தனை காலமும் நான் ஏன் அமைதியக இருந்தேன் என்றால் இந்தப் படம் நல்லபடியாக வெளியாக வேண்டும் என்பதால்தான்” என்றார்.

நடிகர் பிரபுதேவா, “இந்த மாதிரி கதையை ஒத்துக்கொண்டு தயாரிக்க ஒரு தைரியம் வேண்டும். ராஜன் சாருக்கு நன்றி. இயக்குநர் சக்தி சிதம்பரம் என்னுடைய நண்பர் இப்போது. நல்ல கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்காக நன்றி. டெக்னீஷியன்ஸ் எல்லோரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். அபிராமி சின்ன பொண்ணாக பார்த்திருக்கிறேன். இப்போது இன்னும் புத்திசாலியாக மாறியிருக்கிறார். மடோனாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜெகன் – சக்தி பிரச்சினை இப்போது தான் எனக்கு தெரிய வந்திருக்கிறது. நிச்சயம் இதுபற்றி பேசுவோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *