உடன் பணிபுரிந்தவர்கள் பலர் இப்போது இல்லை! “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் கமலஹாசன் வருத்தம்!

உடன் பணிபுரிந்தவர்கள் பலர் இப்போது இல்லை! “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் கமலஹாசன் வருத்தம்!

உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில்,  பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த், ஆகியோர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.

இந்நிகழ்வினில்…

நடிகர் சித்தார்த் பேசியதாவது…

‘இது மிகப்பெரிய மேடை, கமல்ஹாசன் சார், ஷங்கர் சார் இருவரும்  அவர்களின் உழைப்பால் இந்த மேடையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மேடையில் நானும் இருப்பது பெருமை, 25 வருடம் கழித்து இரண்டாவது வாய்ப்பாக, என் குருவுடன் நடிக்கும், இந்த வாய்ப்பை ஷங்கர் சார் தந்துள்ளார். அவருக்கு நன்றி. கமல் சார்,  அவரை சின்ன வயதிலிருந்து கனவில் பார்த்திருக்கிறேன். இப்போது நேரில் தினமும் பார்க்கிறேன் அதுவே பெரும் பாக்கியம். அவருடன் நடித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை. ஷங்கர் சார் தந்த இரண்டு வாய்ப்பிற்கும் நன்றி.  இந்த திரைப்படம் ஊழலின் முகத்தை உண்மையாகப் பேசும் ஒரு முழுமையான படமாக இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.’

இயக்குநர் ஷங்கர் பேசியதாவது…

‘இந்தியன் உருவான போது, சேனாதிபதி கதாப்பாத்திரத்தை உருவாக்கக் கமல் சாரோட போட்டோ, அவரோடு அப்பா போட்டோ, அண்ணா போட்டோ  என எல்லாவற்றையும் தோட்டா தரணியிடம் தந்து ஒரு ஸ்கெட்ச் போட்டுத் தரச் சொன்னேன்.  அந்த ஸ்கெட்ச் பார்த்த போதே சிலிர்ப்பாக இருந்தது. முதல் படத்தில் அவர் மேக்கப் போட்டு வந்து நின்ற போது கூஸ்பம்ஸ் வந்தது, இப்போது இந்த படத்தில் மீண்டும் அவர் மேக்கப் போட்டு வந்த போது, அதே சிலிர்ப்பு வந்தது. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவரை ஷூட்டில் பார்க்கும்போது கமல் சார் என்றே தோன்றாது, ஏதோ இந்தியன் தாத்தா நம்முடனே இருக்கிறார் என்பது போல் தான் தோன்றும். அவர் இந்தியன் தாத்தாவாகத்தான் வாழ்ந்திருக்கிறார். அதே உணர்வு படம் பார்க்கும் போது உங்களுக்கும் வரும். இந்தியன் படம் எடுக்கும் போது 2 ஆம் பாகம் எடுப்பேன் என நினைக்கவே இல்லை, அப்போது தேவைப்பட்ட போது, இந்தியன் தாத்தாவிற்கு அப்போதைக்கு ஒரு பிறந்த வயது வைத்து விட்டேன், ஆனால் இப்போது படம் எடுக்கும்போது அவருக்கு வயது என்ன என்கிற சர்ச்சை வந்துள்ளது. இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் சீனாவில் 118 வயது மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரர் இருந்தார், அந்த வயதிலும் அவர் திடகாத்திரமாக சண்டை போடுவார், ஜேம்ஸ் பாண்ட் ஒரிஜினல் வயது 100க்குமேல் ஆனால் அதையெல்லாம் நாம் கண்டுகொள்வதில்லையே, அதே போல் இந்தியன் தாத்தா என்பது ஒரு உணர்வு. அதை ரசிகர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன். இந்தியன் பார்ட் 1 வந்த போது,  பிராஸ்தடிக் மேக்கப்  அந்த அளவு வளரவில்லை, அதனால் அது ரொம்ப திக்காக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த நிறுவனத்திடம் சொல்லி மேக்கப் தின்னாக இருக்க வேண்டும் எனக்கேட்டு போட வைத்தோம். அதனால் நீங்கள் கமல் சார் நடிப்பை இன்னும் நன்றாகப் பார்க்கலாம். இந்தப்படத்தை முதலில் வேறொருவர் தான் எடுப்பதாக இருந்தது ஆனால் கதையை கேட்டவுடன் நான் தான் தயாரிப்பேன் எனச் சொன்னார் சுபாஸ்கரன், இந்தியன் மாதிரி ஒரு படத்தை லைகா போன்ற நிறுவனம் தான் எடுக்க முடியும்.  சுபாஸ்கரன் சார், ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்ந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி. இந்தியன் படம் தமிழ் நாட்டில் நடக்கும் ஆனால் இது இந்தியா முழுக்க நடக்கும் கதை, இந்தியா முழுக்க பல மாநிலங்களில் ஷூட் செய்துள்ளோம். ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.’

நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது…

‘இந்த வயதில் இப்படம் செய்யும்  ஆர்வம் இவர்களிடம் இருந்து தான் வந்தது. எல்லா கலைஞர்களும் தந்த ஊக்கம் தான் என்னை இயக்கியது. நேர்மறை விசயங்கள் தாண்டி, இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது, நிறையத் தடங்கல்களும் வந்தது. இவ்வளவு கஷ்டப்படுகிறோம் ஆனால் இந்த உழைப்பு ரசிகர்களிடம் போய்ச்சேருமா? எனத் தயக்கம் இருந்தது, ஆனால் இப்போது அது சேரப்போகிறது என்பது மகிழ்ச்சி. உடன் பணிபுரிந்தவர்கள் பலர் இப்போது இல்லை, இப்படிப் பல நிகழ்வுகளைத் தாண்டித்தான் இந்தப்படம் இங்கு வந்துள்ளது. இப்போது எல்லோரும் நன்றாக  இருப்பதாகச் சொல்வது  மகிழ்ச்சி. சென்சாரில் படம் பிடித்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். அது இன்னும் மகிழ்ச்சி. இந்தியன் படம் எடுக்கும்போது, அது தான் அதிக பட்ஜெட் அது ஒரு குறையாகக் கூடச் சொல்லப்பட்டது, ஆனால் இப்போது இந்தப்படத்துடன் ஒப்பட்டால் அது ஒன்றுமே இல்லை. இப்படத்தை அத்தனை பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார் ஷங்கர். அத்தனை கலைஞர்களும், நட்சத்திரங்களும் முழு உற்சாகத்துடனும், உண்மையாக உழைத்து உருவாக்கியுள்ளனர். விவேக் சொன்னது இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த உழைப்பு அத்தனையும் நம்புகிறேன் நான். இந்தியன் தாத்தா உபயோகிக்கும் பேனா, உடை என அத்தனையையும், அவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்த பிறகே ஒகே சொல்வார் இயக்குநர். கனவில் நினைத்துக் கொண்டிருந்ததை எல்லாம் நிஜமாக்கி காட்டியிருக்கிறார். இந்தியன் என்றால் என்ன தாத்தா வருவார், ஷங்கர் படமென்றால் பிரம்மாண்டம் பாட்டு நல்லாருக்கும் என எளிதாகச் சொல்லிவிடுவார்கள், ஆனால் அது அத்தனை எளிதல்ல, இரண்டாம் பாகம் எனும் போது, நானே அதைத்தான் சொன்னேன், இதே கேள்வி எனக்கும் இருந்தது. ஆனால் அதைத்தாண்டி மிகச்சிறப்பாகத் திரைக்கதை அமைத்துள்ளார் ஷங்கர். ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்ய நிறைய வைத்துள்ளார். படம் உங்கள் அனைவரையும் அசத்தும்’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *