இப்படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது ! ‘மங்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை கயல் ஆனந்தி!

இப்படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது ! ‘மங்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை கயல் ஆனந்தி!

 

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிகழ்வில் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் பல முக்கிய திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்

‘கிடா’ படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் பேசும் போது…

இந்த மேடையினை எனக்குக் கொடுத்த குபேந்திரன் சார் அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளருக்கு பெரிய நன்றி. ஏனென்றால் இது போன்ற கண்டெண்ட் தொடர்புடைய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் இப்பொழுது மிகவும் குறைவு. இப்படத்தில் பணியாற்றிய கார்த்திக் அண்ணா அவர்களுக்கு நன்றி. அவர் ஆலமரம் போன்றவர். எத்தனையோ பேருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவர் அவர். இசையமைப்பாளர் தீசன் அவர்களுக்கு என் படம் தான் முதல்படம். அவரை அறிமுகப்படுத்தியதை எண்ணி பெருமைப்படுகிறேன். தீசன் இன்னும் சில ஆண்டுகளில் மிக முக்கியமான இசையமைப்பாளராக இருப்பார். படத்தில் எல்லா பாடல்களும் சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்த்துவிட்டேன், சிறப்பாக வந்திருக்கிறது.

‘மேற்குதொடர்ச்சி மலை’ பட இயக்குநர் லெனின் பேசும் போது…

கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கின்ற அடிப்படையில் ‘மங்கை’ படம் உருவாகி உள்ளது என்று தெரியும். இப்படத்தின் பாடல்கள் மற்றும் சில காட்சிகளைப் பார்த்தப் பின்னர் தான் டைட்டில் டிசைனை கவனித்தேன். ஆண் கதாநாயகர்களை மையப்படுத்திய டைட்டிலைப் பார்த்தால் கம்பீரமாக இருக்கும். ஆனால் இங்கு மங்கை கீறப்பட்டு இருக்கிறது, காயப்பட்டிருக்கிறது, உடைந்திருக்கிறது. சிதைந்திருக்கிறது, தாக்கப்பட்டு இருக்கிறது. அதற்குக் கீழ் டிராவல் ஆஃப் வுமன் என்கின்ற கேப்ஷன் இருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய அரசியல். எல்லா காலத்திலும் எல்லா சாதியிலும் எல்லா மதத்திலும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ‘மங்கை’ என்கின்ற இந்த டைட்டில் மற்றும் திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. குழுவினருக்கு வாழ்த்துகள். விழா நாயகன் தீசன் அவர்களுக்கு வாழ்த்துகள், பாடலாசிரியர்கள் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நாயகன் துஷிக்கும் வாழ்த்துகள். தோழர் ஆனந்தி எப்போதும் ஆழ அகலக் கதைகளையே தேர்ந்தெடுப்பார். அவர் தேர்வு செய்யும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும். கடைசி வரைக்கும் இப்படியே இருங்கள் தோழர் ஆனந்தி. பெண்களை உடலாகப் போதிக்காமல் ஒரு உயிராக பாவிக்கும் எண்ணத்தை இப்படம் முன்னெடுக்கும் என்று கூறி வாழ்த்து கூறி விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்.

இசையமைப்பாளர் தீசன் பேசும் போது…

அனைவருக்கும் வணக்கம். என் தாய் தந்தையர், அண்ணன், என் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. தங்கத் தளபதி கார்த்தி அண்ணன் அவர்களுக்கு நன்றி. இயக்குநர் குபேந்திரன் காமாட்சி எனக்கு என்ன தேவையோ அதைவிட சிறப்பான வசதிகளை செய்து கொடுத்தார். அவருக்கு நன்றி. பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் என் டீம் அனைவருக்கும் நன்றி. ஜாஃபர் சாருக்கு மிகப்பெரிய நன்றி. பத்திரிகையாளர்கள் தான் என் முந்தைய படமான ‘கிடா’வை மக்களிடம் சென்று சேர்த்தீர்கள். அது போல் இப்படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்.

நடிகை ஆனந்தி பேசும் போது…

அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. :கயல்’ வெளியாகி பத்து ஆண்டுகள் கழித்து ‘மங்கை’ படம் வெளியாக இருக்கிறது. ‘மங்கை’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நான் படத்தில் நடிக்க வந்துவிட்டேன். அப்போது சினிமா குறித்து ஒன்றும் தெரியாது. இப்பொழுதும் பெரிதாக ஒன்றும் தெரியாது. இப்பொழுது தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். என் படங்களை எடுத்துப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். கண்டிப்பாக இப்படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன். படம் பாருங்கள். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். தயாரிப்பாளர் ஜாஃபர் எங்களுக்கு கிடைத்த வரம். படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க அவ்வளவு உழைத்திருக்கிறார். எக்ஸீகியூட்டிவ் புரொடியூசர் கார்த்திக் சார் எல்லா வேலைகளையும் எடுத்து செய்வார். எல்லாவித உதவிகளையும் எல்லோருக்கும் செய்பவர். அவருக்கு நன்றி. இன்றைய விழா நாயகன் தீசன் அவர்களுக்கு வாழ்த்துகள், மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ஸ்டார் அவர்களுக்கு நன்றி. ஷிவின் எனக்கு ஒரு நல்ல தோழியாக மாறி இருக்கிறார். அது போல் துஷி எனக்கு நல்ல நண்பர். ஜே.பி சாரின் பையன் என்பதை எல்லாம் காட்டிக்கொண்டதே இல்லை.
நல்ல படங்களை எப்போதும் ஆதரிப்பீர்கள். இப்படத்திற்கும் உங்கள் ஆதரவை தாருங்கள். ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.” நன்றி.

இயக்குநர் குபேந்திரன் காமாட்சி பேசும் போது…

அனைவருக்கும் வணக்கம். பத்திரிகை, ஊடக மற்றும் இணையதள நண்பர்கள் அனைவருக்கு வணக்கம். தீசன் எப்போதுமே பாஸிட்டிவ் எனெர்ஜியுடன் இருப்பார். அவருக்கு மிக்க நன்றி. படப்பிடிப்புக்கு போகும் போது ஒரு பாடல் மட்டும்தான் இருந்தது. பின்னர் அது ஐந்து பாடல்களாக ஆனது. அதற்கு தீசனின் இசை ஒரு காரணம். பாடலாசிரியர்கள் கபிலன், யுகபாரதி, கார்த்திக் நேத்தா அனைவருக்கும் நன்றி.

படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் ஜாஃபர் சார் மற்றும் ஒளிப்பதிவாளர் ஸ்டார் சார் அனைவருக்கும் நன்றி, படத்திற்கு பத்திரிகையாள்ர்களான் நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *