கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது !
‘டாடா’ படத்தின் ஹிட்டுக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘ஸ்டார்’. இப்படத்தை ‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்குகிறார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் கவின் நடிக்க இவருடன் பாலிவுட் நடிகை ஒருவரும், கோலிவுட் நடிகை ஒருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஒருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
‘நித்தம் ஒரு வானம்’ படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், ‘விருபாக்ஷா’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார். தேசிய விருது வென்ற ஆடை வடிவமைப்பாளரான சுஜித் சுதாகரன் ஆடை வடிவமைப்பாளராகவும், எஸ். வினோத்குமார் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றது. 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகவும், விரைவில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும் படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளான இன்று (ஆகஸ்ட் 31) இப்படத்தில் இருந்து பிரத்யேக புரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்தப் படத்தில் இடம் பெறும் அறிமுக பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து படமாக்கப்பட்டிருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இளைய தலைமுறையினரை கவரும் வகையில் வித்தியாசமாக இசையமைத்துள்ளதாக பேசப்படுகிறது. படத்தின் வெளிட்யீடு தேதியை விரைவில் படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.