பெடியா திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது
மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ (ஓநாய்) திரைப்படத்தில் இருந்து ‘எல்லாம் ஓகே வா!’ எனும் உற்சாகமூட்டும் புதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
பெடியா திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகன் வருண் தவான் மற்றும் அவரது நம்பிக்கை மிகுந்த ஓநாய் நண்பர்கள் பழைமையான கார் ஒன்றில் மகிழ்ச்சியான சாலைப் பயணம் மேற்கொள்வது போன்று ‘எல்லாம் ஓகே வா!’ பாடல் அமைந்துள்ளது.
‘எல்லாம் ஓகே வா!’ பாடலை உற்சாகத்துடன் பாடிகொண்டே வருண் தவான், அபிஷேக் பானர்ஜி மற்றும் பாலின் கபக் உள்ளிட்டோர் அருணாச்சலப் பிரதேசத்தின் இயற்கை எழில் மிகு சாலைகளில் பயணிக்கின்றனர். மூன்று நண்பர்களுக்குள் உள்ள ஒற்றுமையையும் நட்பையும் இப்பாடல் நன்றாக பிரதிபலிக்கிறது.
அவர்கள் பயன்படுத்தும் பழைய மாருதி 800 கார் கடந்த காலத்தை கச்சிதமாக நினைவுப்படுத்துகிறது. சூழலுக்கு ஏற்ப இசையும், பாடல் வரிகளும் இரண்டற கலந்து கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைந்துள்ளன.
சச்சின்-ஜிகார் இசையில், அமிதாப் பட்டாச்சார்யா மற்றும் எஸ் சுனந்தனின் வரிகளில் உருவான பாடலை சந்தோஷ் ஹரிஹரன், வேலு மற்றும் கே ஜே ஐயனார் பாடியுள்ளனர்.
பாடலை பற்றி பேசிய இசை அமைப்பாளர்கள் சச்சின்-ஜிகார், “இளமை ததும்பும், உற்சாகமூட்டும் பாடலாக ‘எல்லாம் ஓகே வா!’ அமைந்துள்ளது. புதுமையான மெட்டுடனும், புத்துணர்ச்சி தரும் வரிகளுடனும் இசையின் மாயாஜலத்தை வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் இருக்கிறது,” என்றனர்.
‘பெடியா’ திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியிடப்பட்ட மூன்று பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், தற்போது வெளியாகி உள்ள ‘எல்லாம் ஓகே வா!’ பாடலும் வெற்றி பட்டியலில் இணைந்து பயணத்திற்கு உகந்த நண்பனாக திகழும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள ‘பெடியா’ நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஸ்டுடியோ கிரீன் வெளியிட உள்ளது.